கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி பாணியை மீண்டும் கையில் எடுக்கும் பி.சி.சி.ஐ.?

Published On 2025-01-16 11:53 IST   |   Update On 2025-01-16 11:53:00 IST
  • அமலுக்குக் கொண்டுவர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்.
  • இந்த விதியை மீண்டும் கொண்டு வரலாம்.

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.-க்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில், மீண்டும் பழைய விதிகளை அமலுக்குக் கொண்டுவர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி விராட் கோலி இந்திய அணி கேப்டனாக இருந்தபோது பின்பற்றப்பட்டு வந்த உடற்பயிற்சி சார்ந்த சோதனைகள் தொடர்பான விதிகளை மீண்டும் கொண்டுவர பி.சி.சி.ஐ. ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரர்களின் பணிச்சுமை மற்றும் பயணம் சார்ந்த இன்னல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு கட்டாய யோ-யோ சோதனையை பி.சி.சி.ஐ. ரத்து செய்தது. ஆனால், இந்த விதியை மீண்டும் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் செய்தி குறிப்பில், "கடுமையான அட்டவணை காரணமாக காயம் ஏற்படுவதை தடுக்கும் முயற்சிகளை கைவிட்டு, தேர்வுக்கான உடற்பயிற்சி அளவுகோல்களுக்கு மீண்டும் திரும்புமாறு மருத்துவக் குழுவிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. காயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முந்தைய நிர்வாகத்தால் யோ-யோ சோதனை நீக்கப்பட்டது, ஆனால் இப்போது இந்த நடவடிக்கையில் மீண்டும் மாற்றம் செய்யப்படலாம்.

"வீரர்கள் பெரும்பாலும் பயணங்களில் இருப்பதால், வாரியம் அவர்கள் மீது மென்மையாக நடந்து கொண்டது. காயம் ஏற்படுவதை தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. இது சில வீரர்களால் இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மெத்தனப் போக்கு வராமல் இருக்க குறிப்பிட்ட உடற்பயிற்சி நிலை அளவுகோல்களை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது," என்று தகவல்கள் தெரிவித்ததாக செய்தி வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News