புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர் ரோகித்- ஆகாஷ் தீப் புகழாரம்
- நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில் ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
- ரோகித் சர்மா தான் அந்த தலைவர்.
இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.
இதனால் கடும் விமர்சனங்கள் அவர்கள் மீது எழுந்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மீது பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் விலகினார். அந்த தொடர் முடிந்து இந்தியா திரும்பிய ரோகித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர் ரோகித் சர்மா என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தனது அணிக்கு என்ன தேவையோ அதைதான் முன்னிலைப் படுத்துவார். ரோகித் பாய் எப்போதும் உத்வேகம் அளிப்பவர். என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர்.
நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில் ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். ரோகித் சர்மா தான் அந்த தலைவர்.
என ஆகாஷ் தீப் கூறினார்.