நிதிஷ் ரெட்டி- வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய சச்சின்
- நிதிஷ் ரெட்டியிடம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆட்டம்.
- நிதிஷ் இந்த தொடரின் முதல் போட்டியிலிருந்து தனது பொறுமை, நிதானம் ஆகியவற்றால் என்னை இம்ப்ரெஸ் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 105 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்சமயத்தில் 116 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா போராடினால் வெல்லலாம் என்ற நிலையில் இருக்கிறது.
இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு நிதிஷ் கை கொடுத்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் அவரை மட்டுமின்றி தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரையும் சேர்த்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நிதிஷ் ரெட்டியிடம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆட்டம். அவர் இந்த தொடரின் முதல் போட்டியிலிருந்து தனது பொறுமை, நிதானம் ஆகியவற்றால் என்னை இம்ப்ரெஸ் செய்தார். இன்று அவர் அதை உச்சமாக எடுத்துக் கொண்டு இந்த தொடரின் முக்கியமான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அவருக்கு அற்புதமான திறமையுடன் வாஷிங்டன் சுந்தர் ஆதரவு கொடுத்தார். நன்றாக விளையாடினீர்கள்.
என்று சச்சின் கூறியுள்ளார்.