கிரிக்கெட் (Cricket)

பிரிஸ்பேன் போட்டி டிரா ஆனாலும் எங்களுக்குத்தான் உத்வேகம், இந்தியாவுக்கு அல்ல: கம்மின்ஸ்

Published On 2024-12-18 11:48 GMT   |   Update On 2024-12-18 11:48 GMT
  • பிரிஸ்பேனில் நாங்கள் 450 ரன்கள் அடித்துள்ளோம்.
  • இந்தியாவை 260 ரன்னில் கட்டுப்படுத்தியுள்ளோம்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற பிங்க்-பால் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் பிரிஸ்பேனில் மோதின. ஆனால் பிரிஸ்பேனில் ஐந்து நாட்களும் விட்டுவிட்டு மழை பெய்ததால் பெரும்பாலான நேரம் வீணானது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

ஒரு கட்டத்தில் இந்தியா பாலோ-ஆன் ஆகும் நிலை ஏற்பட்டது. பும்ரா- ஆகாஷ் தீப் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆவதை தவிர்த்தது. இதனால் இந்தியாவை தொடர்ந்து பேட்டிங் செய்ய வைத்து நெருக்கடி கொடுக்க முடியாத நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது.

தோல்வியை சந்திக்க இருந்த இந்தியா போட்டியை டிரா செய்தது. போட்டி டிரா ஆன உத்வேகத்துடன் மெல்போர்னில் நடைபெற இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வோம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரிஸ்பேன் போட்டி டிரா ஆனது எங்களுக்குதான் உத்வேகம் என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

உத்வேகம் (momentum) பற்றி நான் ஒருபோதும் பயந்தது கிடையாது என சொல்ல முடியாது. ஆனால் உண்மையிலேயே அது பற்றி கவலைப்பட மாட்டேன். இந்த வாரத்தில் இருந்து (பிரிஸ்பேன் டெஸ்ட்) நாங்கள் ஏராளமானவற்றை எடுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறேன்.

பிரிஸ்பேன் டெஸ்டில் எங்களுக்கு இரண்டு சிறந்த பார்ட்னர்ஷிப் கிடைத்தது. புதிய ஆடுகளத்தில் 450 (445) ரன்கள் சேர்த்தோம். பின்னர் இந்தியாவை 250 (260) ரன்களில் கட்டுப்படுத்தினோம். கண்டிசன் பேட்டிங்கிற்கு சற்று கூடுதலாக ஒத்துழைப்பு கொடுத்தபோதிலும் இதைச் செய்தோம். இப்படி மெல்போர்னுக்கு எடுத்துச் செல்ல எங்களுக்கு ஏராளமான விசயங்கள் உள்ளது.

அஸ்வின் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவர்

அஸ்வின் ஓய்வு அறிவித்த நேரம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உலகம் முழுவதும் ஒரு அற்புதமான வீரராக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் அளவிற்கு நீண்ட காலத்திற்கு தலைசிறந்த ஸ்பின்னர் (finger spinners) அதிக அளவில் இருந்ததில்லை. அஸ்வின் அனைத்து காலங்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.

அவர் சிறந்த போட்டியாளர். ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் அவருக்கு எதிராக நாங்கள் மிகப்பெரிய அளவில் மோதியுள்ளோம். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு எங்கள் வீரர்கள் அறையில் இருந்து மிகப்பெரிய மரியாதை.

இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News