ஐ.பி.எல்.

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தும்- ஹர்பஜன் சிங்

Published On 2025-02-17 13:14 IST   |   Update On 2025-02-17 13:14:00 IST
  • இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது.
  • சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.

புதுடெல்லி:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றும், இந்த ஆட்டம் ஒரு தலைபட்சமாக இருக்கும் என்றும் இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில் இந்தியா மிகவும் பலமான அணியாக உள்ளது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி தழுவி 3 நாடுகள் போட்டி தொடரை இழந்தது.

மேலும் புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதில் தெளிவாக இந்திய அணியே மேலோங்கி இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் மோதிய பழைய போட்டிகளை வைத்து கூறுகிறோம் என்பது உண்மை தான். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் எதிர் காலத்தில் குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் வெளிப்படையாகவே இந்திய அணி பாகிஸ்தானை விட பெரிய அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரை தவிர வேறு யாரும் இல்லை. கேப்டன் பதவியில் ரிஸ்வான் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அவருடைய எண்ணங்களும் நன்றாக இருக்கிறது. ஆனால் சக வீரர்களிடம் இருந்து அவருக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. முன்னாள் வீரர்களிடம் கேட்டாலே இந்திய அணி கொஞ்சம் மேலே இருப்பதை கூறுவார்கள்.

எனவே எல்லா வகையிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும். இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட போட்டியாகும். ஒரு தலைப்பட்சமான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும். வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர்.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Tags:    

Similar News