முட்டாள்தனம்.. ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் குறித்து கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்
- பண்ட் விளையாடியது முட்டாள்தனமாக ஷாட் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
- இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை அடித்துள்ளது.
மெல்போர்ன்:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து இருந்தது. ரிஷப் பண்ட் 6 ரன்னிலும் ஜடேஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், 3 நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட், ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் வித்தியாசமான ஷாட் அடித்து லியான் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.
அப்போது கமெண்ட்ரியில் இருந்த சுனில் கவாஸ்கர், பண்ட் விளையாடியது முட்டாள்தனமாக ஷாட் என்று கடுமையாக விமர்சித்தார்.
அப்போது கமெண்ட்ரியில் பேசிய அவர், "இந்தியா தற்போது இருக்கும் சூழலில் இப்படியா விக்கெட்டை பறிகொடுப்பது? நிலைமையை புரிந்து விளையாட வேண்டும். இதுதான் எனது இயல்பு என்றெல்லாம் கூறமுடியாது. இது உங்கள் அணியை பிடித்து கீழே இழுப்பதுபோல் உள்ளது" என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை அடித்துள்ளது. நிதானமாக விளையாடிய நிதிஷ்குமார் சதம் அடித்து அசத்தினார்.