கிரிக்கெட் (Cricket)

மீண்டும் முதல்ல இருந்து.. ரஞ்சி தொடரில் விளையாடும் விராட் கோலி

Published On 2025-01-20 21:28 IST   |   Update On 2025-01-20 21:28:00 IST
  • வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க கோரிக்கைகள் எழுந்தன.
  • ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதாக தெரிவித்தார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதும் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து, இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதாக தெரிவித்தார்.

அதன்படி, ரோகித் சர்மா மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த வரிசையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ள நிலையில், விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.

வருகிற ஜனவரி 30-ம் தேதி ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்க உள்ளார். முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று தகவல் வெளியானது.

பி.சி.சி.ஐ. புதிய விதிமுறையை அடுத்து இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News