இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து- நன்றி தெரிவித்த சஞ்சய் சிங்
- 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்ததுடன், அவருக்கு எதிராக போராட்டமும் வலுத்ததால் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.
புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வானார். இதனால் சர்ச்சை தொடர்ந்தது. அத்துடன் புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிந்த சில நாட்களில் 15 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரிஜ் பூஷனின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடத்தப்படும் என்று புதிய நிர்வாகிகள் அறிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட 3 நாளிலேயே இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க பூபிந்தர் சிங் பாஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இந்த நிலையில் 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் மல்யுத்த சம்மேளனம், தேசிய விளையாட்டு சம்மேளனத்துக்கான அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளது. விளையாட்டு மற்றும் வீரர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம், புதிய நிர்வாகிகள் இடையே அதிகார சமநிலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.
'மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.