3-வது இந்தியர்.. பார்முலா1 கார் பந்தய அணியில் இடம் பிடித்த குஷ் மைனி
- அல்பைன் அணியின் மாற்று வீரராக இந்தியாவின் குஷ் மைனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- பார்முலா1 கார்பந்தயத்தில் தடம் பதிக்கும் 3-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.
மும்பை:
கார்பந்தயத்தில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார்பந்தயம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான பந்தயம் மொத்தம் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதலாவது சுற்று வருகிற 16-ந்தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலிய கிராண்ட்பிரியுடன் தொடங்குகிறது.
இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் களம் காணுகிறார்கள். இவற்றில் அல்பைன் அணியும் ஒன்று. இந்த அணிக்காக கார் ஓட்டும் பிரதான வீரர்களாக ஜேக் டூஹான் (ஆஸ்திரேலியா), பியரே கேஸ்லி (பிரான்ஸ்) ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் அல்பைன் அணியின் மாற்று வீரராக இந்தியாவின் குஷ் மைனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 24 வயதான குஷ் மைனி ஏற்கனவே பார்முலா2 பந்தயங்களில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் பார்முலா1 கார்பந்தயத்தில் தடம் பதிக்கும் 3-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் ஆகியோர் பார்முலா1 கார்பந்தயத்தில் பஙகேற்று இருக்கிறார்கள்.