விளையாட்டு (Sports)

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை- இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்துமா?

Published On 2024-10-05 09:48 GMT   |   Update On 2024-10-05 09:48 GMT
  • இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 15 முறை மோதியுள்ளன.
  • பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

துபாய்:

9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது.

கடந்த 3-ந்தேதி தொடங்கிய பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

ஏ பிரிவு : நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாள் ஆட்டங்களில் வங்காளதேச அணி 16 ரன்னில் ஸ்காட்லாந்தையும், பாகிஸ்தான் 31 ரன்னில் இலங்கையும் தோற்கடித்தன.

நேற்று நடந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமாக தோற்று மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

இந்திய அணி 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. மாலை 3.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 12-ல் பாகிஸ்தான், 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டி யில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காளதேசம் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

Tags:    

Similar News