விஜய் ஹசாரே கோப்பை: கிருஷ்ணன் ஸ்ரீஜித் அதிரடியால் கடின இலக்கை சேஸ் செய்த கர்நாடகா
- கர்நாடக அணி 383 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- அந்த அணியின் கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்கள் குவித்தார்.
அகமதாபாத்:
விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) நேற்று தொடங்கியது. ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தின் உதவியுடன் 382 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே (78 ரன்), ஹர்திக் தாமோர் (84 ரன்), ஷிவம் துபே (63 ரன்) ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
இதையடுத்து, 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கர்நாடக அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான நிகின் ஜோஸ் 21 ரன்னும், மயங்க் அகர்வால் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின், கர்நாடக அணி வீரர்கள் அதிரடியில் மிரட்டினர். அனீஷ் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கர்நாடக அணி 46.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்களுடனும், பிரவீன் துபே 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.