கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: 51 பந்தில் சதம் விளாசிய ஷ்ரேயாஸ் அய்யர்

Published On 2024-12-21 08:52 GMT   |   Update On 2024-12-21 08:52 GMT
  • இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
  • இவரது தலைமையில் மும்பை அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை சமீபத்தில் வென்றது.

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் முதன்மையான ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

கர்நாடகா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களம் இறங்கியது.

தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆயுஷ் மத்ரே உடன் ஹர்திக் தமோர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 148 ரன்னாக இருக்கும்போது ஆயுஷ் மத்ரே ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். 51 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 55 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.

ஷிவம் டுபே 36 பந்தில் 63 ரன்கள் விளாசினார். ஹர்திக் தமோர் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 383 ரன்கள் அடித்தால் வெற்றி என இமாலய இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாடினால்தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ கறாராக தெரிவித்ததால் இவருக்கும் பிசிசிஐ-க்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது.

இதற்கிடையே 2024 ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இவர் தலைமையிலான மும்பை அணி சில நாட்களுக்கு முன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஷ்ரேயாஸ் அய்யரை ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News