விஜய் ஹசாரே டிராபி: உத்தர பிரதேச அணியின் கேப்டன் ஆனார் ரிங்கு சிங்
- உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- உ.பி. அணி தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.
லக்னோ:
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த அதிரடி ஆட்டமே அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க சிறந்த வழியாக அமைந்தது.
இந்நிலையில், உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ரிங்கு சிங் கூறியதாவது:
புதிய ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கேப்டன் பதவி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை.
2015 மற்றும் 16ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற தமது உத்தரப்பிரதேச அணி மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கம்.
நான் யூபி டி20 லீக்கில் பந்து வீச முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் தொடர் ஒரு முழு பேக்கேஜை தான் விரும்புகிறது. பேட்டிங் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் செய்யக்கூடிய வீரராக இருப்பது முக்கியம்.
எனவே நான் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். கேப்டனாக எனக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இதற்கு நான் தயாராக இருப்பது அவசியம்.
நான் கடவுளை எப்போதும் நம்புகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 சிக்சர்கள் அடித்த பிறகு இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது.
இப்போதும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று உணர்கிறேன். ஆனால் அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச அணி இன்று தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.