சாம்பியன்ஸ் டிராபி- பாகிஸ்தானுக்கு நஷ்ட ஈடாக ரூ.38 கோடி வழங்கும் ஐ.சி.சி.
- 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
9- வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்தப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
இதை பாகிஸ்தான் ஏற்காமல் நீண்ட நாட்களாக பிடிவாதமாக இருந்து வந்தது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்தது.
இதேபோல 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போன்றே அந்த தொடர்களிலும் பாகிஸ்தானுக்கு உரிய ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்கான ஆட்டத்தை பொதுவான இடத்தில் ஹைபீரிட் மாடலில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. நஷ்டஈடு வழங்கியது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. மூலம் ரூ.38 கோடி கிடைக்கும்.
ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த பண இழப்பும் ஏற்பட போவதில்லை. பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக ரூ.38 கோடி கொடுப்பது தொடர்பாக ஐ.சி.சி. விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.