
முதல் வெற்றியை பெறுவது யார்?- கொல்கத்தா-ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போல் தோல்வியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சிடம் போராடி பணிந்தது.
கொல்கத்தா அணியின் முதல் ஆட்டத்தில் ரஹானே, சுனில் நரின் தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. குயின்டான் டி காக், வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஒற்றை படையை தாண்டவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததுடன், 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ராஜஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், ஐதராபாத்துக்கு எதிராக 286 ரன்களை வாரி வழங்கி விட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை சிதறவிட்டு வள்ளலாக மாறினார். இமாலய இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியினர் 246 ரன்கள் வரை நெருங்கினர். சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம் அடித்தனர். விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் 'இம்பேக்ட்' வீரராகவே பயன்படுத்தப்பட்டார். இன்றைய ஆட்டத்திலும் அதே நிலை தொடருவதால் ரியான் பராக் கேப்டன் பணியை கவனிப்பார்.
மொத்தத்தில் இரு அணிகளும் தங்களது பந்துவீச்சில் உள்ள குறைபாட்டை சரி செய்து முதல் வெற்றிக்கு தீவிரம் காட்டும். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன. மற்றொரு போட்டியில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா அல்லது ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால்.
கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன் அல்லது அன்ரிச் நோர்டியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.