
IPL 2025: எல்லா போட்டிகளும் 240 - 250 ரன்கள் அடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை- சுப்மன் கில்
- முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
- அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் இருந்தால், கிரிக்கெட்டின் திறமை பறிபோகும்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்த தொடரின் முதல் வெற்றியை குஜராத் பதிவு செய்தது.
இப்போட்டி களிமண் ஆடுகளத்தில் நடத்தப்பட்டது குறித்து பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், "மும்பை அணிக்கு எதிரான மோதலுக்கு களிமண் ஆடுகளத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வகை கிரிக்கெட்டை அவர்கள் விளையாட விரும்பும் விதமும் அதில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
சிவப்பு மண் ஆடுகளத்தை விட களிமண் ஆடுகளம்தான் எங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும், எங்கள் அணியின் ஒட்டுமொத்த பலத்திற்கும் மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன.
போட்டிகள் செல்லும் விதத்தைப் பார்த்தால், 240 முதல் 250 ரன்கள் ஸ்கோர் செய்யப்படுவதை நாம் பார்க்கிறோம். நாம் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கவேண்டும். அப்போது தான் ஆட்டம் சமநிலையுடன் இருக்கும். எல்லா ஆட்டங்களும் 240 - 250 ரன்கள் அடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவு அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் இருந்தால், கிரிக்கெட்டின் திறமை பறிபோகும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.