விளையாட்டு

மாற்று வீரர் விஷயத்தில் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை- பட்லர்

Published On 2025-02-01 10:44 IST   |   Update On 2025-02-01 10:44:00 IST
  • போட்டி நடுவர் இந்த முடிவை எடுத்ததாக நடுவர்கள் என்னிடம் கூறினார்கள்.
  • ஆட்டத்தை வெல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன.

இந்தியா பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் ஷிவம் துபே ஹெல்மட்டில் பவுன்சர் பந்து தாக்கியது. இதனால் இங்கிலாந்து பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தபோது அவர் ஆடுகளத்துக்குள் வரவில்லை.

பந்து தாக்கியதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா விதிப்படி அணியில் சேர்க்கப்பட்டார். ஹர்ஷித் ராணா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதுபோன்ற மாற்றத்தின் போது காயத்தால் விலகிய வீரருக்கு இணையான வீரரை தான் சேர்க்க முடியும். ஷிவம் துபேக்கு மாற்றாக மிகவும் சிறப்பாக செயல்படக் கூடிய பந்து வீச்சாளரை தேர்வு செய்த விவகாரம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இது தொடர்பாக கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மாற்று வீரர் விஷயத்தில் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற விஷயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதி தான். எப்படி இருந்தாலும் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். அதே சமயம் இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை. என்னிடம் யாரும் இதைப் பற்றி ஆலோசிக்கவில்லை.

நான் பேட்டிங் செய்ய வந்த போது ஹர்ஷித் ராணா யாருக்கு பதிலாக இங்கே இருக்கிறார் என்று தான் நினைத்தேன். அதன் பின்னர் ராணா மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது இணையான மாற்று வீரர் தேர்வு இல்லை.

போட்டி நடுவர் இந்த முடிவை எடுத்ததாக நடுவர்கள் என்னிடம் கூறினார்கள். எனவே இந்த விஷயத்தில் மறுப்பு சொல்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் நிச்சயம் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் சில கேள்விகளை கேட்போம். இந்த விஷயத்தில் மேலும் அதிக தெளிவை பெற முயற்சிப்போம்.

நாங்கள் போட்டியில் வெற்றி பெறாததற்கு இது முழு காரணமும் அல்ல. ஆட்டத்தை வெல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News