கிரிக்கெட் (Cricket)

ஹர்ஷித் ராணா பந்துவீச்சு பிரமிக்க வைத்தது- சூர்யகுமார் யாதவ் பாராட்டு

Published On 2025-02-01 14:32 IST   |   Update On 2025-02-01 14:32:00 IST
  • ஹர்ஷித் ராணா 3-வது வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் வந்து பந்து வீசினார்.
  • அவருடைய பந்து வீச்சு நம்பமுடியாத வகையில் பிரமிக்க வைத்தது.

புனே:

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது.

ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிவம் துபே 34 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரிங்கு சிங் 26 பந்தில் 30 ரன்னும் ( 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சகீப் மக்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால்15 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

ஹாரி புரூக் அதிக பட்சமாக 26 பந்தில் 51 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), பென் டக்கெட் 19 பந்தில் 39 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்தியா டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக் கில் கைப்பற்றியது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது மிகவும் மோசமானது. ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் அணியை சரிவில் இருந்து மீட்டார்கள். ஷிவம் துபேவும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் சரியான திசையை நோக்கி செல்கின்றோம். பவர் பிளேவுக்கு பிறகு 7 முதல் 10 ஓவரில் ஆட்டத்தை எங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்று நினைத்தேன்.

எங்கள் அணி வீரர்கள் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதே போன்று ஹர்ஷித் ராணா 3-வது வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் வந்து பந்து வீசினார். அவருடைய பந்து வீச்சு நம்பமுடியாத வகையில் பிரமிக்க வைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மேலும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Tags:    

Similar News