அவருக்குள் இருக்கும் நெருப்பு தானாகவே எரியும்.. விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு
- விராட் கோலி பார்ம் அவுட்டில் தவித்து வருகிறார்.
- ரஞ்சி கோப்பையில் களமிறங்கிய கோலி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. சமீப காலங்களில் ஃபார்ம்-அவுட் ஆகி தவிக்கும் விராட் கோலி கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர்களில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர் மட்டுமின்றி இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலரும் இதே சூழலில் சிக்கியுள்ளனர்.
இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "தற்போதைக்கு விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாட தேவையில்லை. 81 சர்வதேச சதங்களுக்கும் அவரது நுட்பம் நன்றாகவே இருந்தது. இனிமேலும் அது நன்றாகவே இருக்கும். அவரை யாரும் வற்புறுத்த வேண்டாம். அவருக்கு சிறிது நேரம் தேவை. அவருக்குள் இருக்கும் நெருப்பு தானாகவே எரியும். அவருக்கும் கொஞ்சம் மரியாதை அளியுங்கள், அவரை நம்புங்கள். மிக முக்கியமாக அவரை தனியாக இருக்க விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.