அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விருத்திமான் சஹா
- பெங்கால் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த சஹா பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இன்று ஆடினார்.
- சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கொல்கத்தா:
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக 40 டெஸ்ட் போட்டிகளில் விருத்திமான் சஹா விளையாடி உள்ளார். அவர் இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். பெங்கால் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இன்று ஆடினார்.
இந்த தொடருக்கு முன்னதாகவே அவர் தனது ஓய்வு முடிவை வெளியிட்டு இருந்தார். அதன் படி பெங்கால் அணியில் இடம் பெற்று தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆடிய அவர் 28 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வுக்கு விடை கொடுத்தார்.
விருத்திமான் சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 56 இன்னிங்ஸ்களில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 3 சதம் மற்றும் 6 அரை சதங்களை அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் 92 கேட்சுகளையும், 12 ஸ்டம்பிங்குகளையும் செய்து உள்ளார்.
ஓய்வை பெற்ற நிலையில் இந்திய அணி, பெங்கால் கிரிக்கெட் அணி மற்றும் திரிபுரா கிரிக்கெட் அணி ஆகிய மூன்று அணிகளுக்கும், அதன் கிரிக்கெட் அமைப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மேலும், விருத்திமான் சஹா. ஐபிஎல் தொடரில் ஐந்து அணிகளில் இடம் பெற்று ஆடி இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என தான் இடம் பெற்று இருந்த ஐந்து அணிகளுக்கும் நன்றிகளை கூறி இருக்கிறார்.
தனது பயிற்சியாளர்கள், நண்பர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று இருக்கிறார் விரித்திமான் சாஹா.