விளையாட்டு

4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர்கள் புதிய சாதனை- மேலும் 2 தங்கம் கிடைத்தது

Published On 2022-06-13 15:38 IST   |   Update On 2022-06-13 15:38:00 IST
  • முதல் 2 நாள் போட்டி முடிவில் தமிழக அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது.
  • ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் சுரேந்தர் 14.18 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

சென்னை:

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் 2 நாள் போட்டி முடிவில் தமிழக அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது.

3-வது நாளான நேற்று தமிழகத்துக்கு மேலும் 2 தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி. கனிமொழி தங்கப்பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 13.62 வினாடியில் கடந்தார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.09 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழரசு, இலக்கியதாசன், விக்னேஷ், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது.

பந்தய தூரத்தை தமிழக வீரர்கள் 39.88 வினாடியில் கடந்தனர். இதன் மூலம் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2018-ம்ஆண்டு கவுகாத்தியில் நடந்த போட்டியில் தமிழக அணி 40.22 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் தங்களது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் சுரேந்தர் 14.18 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதே போல உயரம் தாண்டுதலில் பாரதி விஸ்வநாதன் 2.18 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் பெற்றார்.

நேற்றைய போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது.

Tags:    

Similar News