அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்- ஜோகோவிச் வரலாறு படைப்பாரா?
- அமெரிக்க ஓபனில் மீண்டும் மகுடம் சூடினால், ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் களம் இறங்குகிறார்.
நியூயார்க்:
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 144-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 2 வாரம் நடக்கிறது. கடின தரையில் நடைபெறும் இந்த போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான ஜானிக் சினெர் (இத்தாலி) நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், பிரெஞ்சு, விம்பிள்டன் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து ருசித்தவருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகிய மூவர் இடையே தான் பட்டத்தை கைப்பற்றுவதில் நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெரிய அளவில் சோபிக்காத ஜோகோவிச் சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அல்காரசை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி தனது நீண்ட நாள் ஏக்கத்தை தணித்தார். அதன் பிறகு ஜோகோவிச் கலந்து கொள்ளும் முதல் போட்டி இதுவாகும். அனுபவசாலியான அவர் அதிக பட்டங்கள் வென்று குவித்து இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற தாகம் தனக்கு இன்னும் குன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'தற்போது நீங்கள் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் உள்பட எல்லாவற்றையும் வென்றுள்ளீர்கள். வெற்றி பெற வேறு என்ன இருக்கிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். என்னிடம் இன்னும் போட்டி உத்வேகம் உள்ளது. மேலும் பல சாதனைகள் படைத்து போட்டி தொடரை அனுபவிக்க விரும்புகிறேன். 2008-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் ஒற்றையரில் வீரர்கள் யாரும் பட்டத்தை தக்கவைக்கவில்லை என்ற நிலைமை இந்த ஆண்டு மாறும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு போட்டி தொடரிலும் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதுடன் கோப்பைக்காக போராட வேண்டும் என்பது தான் எனது இலக்காகும். அந்த மாதிரியான மனநிலையும், அணுகுமுறையும் இந்த ஆண்டும் தொடரும்' என்றார்.
4 முறை சாம்பியனான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் மீண்டும் மகுடம் சூடினால், ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான ஜோகோவிச் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 152-ம் நிலை வீரரான மால்டோவாவின் ராடு அல்போட்டை எதிர்கொள்கிறார். இதேபோல் 'நம்பர் ஒன்' வீரர் இத்தாலியின் ஜானிக் சினெர், 93-ம் நிலை வீரரான அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டுடன் மோது கிறார். ஸ்பெயினின் இளம் புயல் கார்லஸ் அல்காரஸ் தனது முதல் மோதலில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் பெற்ற 188-ம் நிலை வீரரான லீ தூவை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.
இதற்கிடையே, பயிற்சியின் போது 21 வயது அல்காரஸ் வலது கணுக்காலில் காயம் அடைந்துள்ளார். இதனால் அவரால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயிற்சியை நிறுத்தினேன். பயிற்சியை தொடர்ந்து போட்டிக்கு சிறப்பாக தயாராக விரும்புகிறேன். ஒரிரு நாளில் முழு உடல் தகுதியை எட்டிவிடுவேன்' என்று அல்காரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல் ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து விடுபட்டு இந்த போட்டியில் ஆடும் ஜானிக் சினெர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.
கணிப்பு படி எல்லாம் சரியாக நகர்ந்தால் அல்காரஸ் அரைஇறுதியில் ஜானிக் சினெருடன் பலப்பரீட்சை நடத்த வேண்டியது வரலாம். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), ஹூபெர்ட் ஹர்காஸ் (போலந்து) உள்ளிட்ட வீரர்களும் கோப்பைக்காக வரிந்து கட்டுவார்கள் என்பதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
உலக தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் களம் இறங்குகிறார். அவர் தனது முதல் ஆட்டத்தில் 28-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் தல்லோன்கிரிக்ஸ்பூருடன் மோதுகிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி, சுமித் நாகல், ரோகன் போபண்ணா ஆகியோர் தங்கள் இணையுடன் களம் காணுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து), முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், அண்மையில் நடந்த சின்சினாட்டி போட்டியில் பட்டம் வென்றவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியனும், உள்ளூர் வீராங்கனையுமான கோகோ காப் ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதேபோல் முன்னாள் சாம்பியன்களான எம்மா ரடுகானு (இங்கிலாந்து), நவோமி ஒசாகா (ஜப்பான்), அஸரென்கா (பெலாரஸ்), ஒலிம்பிக் சாம்பியன் கிங்வென் செங் (சீனா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) உள்ளிட்டோரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.
நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் கோகோ காப் தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் வர்வரா கிராசிவாவுடன் மோதுகிறார். 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ரஷியாவின் கமிலா ராஹிமோவாவை சந்திக்கிறார். பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தகுதி சுற்று மூலம் நுழைந்த 203-ம் நிலை வீராங்கனை பிரிசில்லா கானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். நவோமி ஒசாகா, எம்மா ரடுகானு ஆகியோருக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. ஒசாகா 10-ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவுடனும் (லாத்வியா), எம்மா ரடுகானு, 26-ம் நிலை வீராங்கனை சோபியா கெனினுடனும் (அமெரிக்கா) மல்லுக்கட்டுகின்றனர்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.629 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 கோடி பரிசாக கிடைக்கும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் பெறுவார்கள். 2-வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்படும். ஒற்றையர் முதல் சுற்றில் கால் பதித்தாலே ரூ.83 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.6¼ கோடி பரிசாக கிடைக்கும்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், கோகோ காப், கேஸ்பர் ரூட், ஆந்த்ரே ருப்லெவ், கிரெஜ்சிகோவா உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆடுகிறார்கள்.