வீடியோ: ராட்சத தூண்களை அதிக நேரம் தாங்கிப்பிடித்து இந்தியாவின் ஸ்டீல்மேன் கின்னஸ் சாதனை
- விஸ்பி கரடி இந்தியாவின் ஸ்டீல் மேன் என்று அழைக்கப்படுகிறார்.
- விஸ்பி கரடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 10 முறை இடம்பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஸ்பி கரடி ஒரு இந்திய தற்காப்புக் கலை நிபுணர், பயிற்சியாளர் மற்றும் சாதனையாளர் ஆவார். அவர் குடோ (Kudo) என்ற ஜப்பானிய தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.
அவரது உடல் வலிமை மற்றும் சாகசங்களால் "இந்தியாவின் ஸ்டீல் மேன்" என்று அழைக்கப்படுகிறார். விஸ்பி கரடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 10 முறை இடம்பெற்றுள்ளார். அவரது சாதனைகள் பெரும்பாலும் உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்டவை.
உதாரணமாக, உடலைப் பயன்படுத்தி இரும்பு கம்பிகளை வளைத்தல், செங்கற்களை உடைத்தல், கைகளால் கடினமான பொருட்களை உடைப்பது போன்றவை அவரது சாகசங்களில் அடங்கும்.
அந்த வகையில் தற்போது ஒரு சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். அதன்படி குஜராத்தின் சூரத்தில் ஹெர்குலஸ் தூண்களை நீண்ட நேரம் தாங்கி பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். விஸ்பி 2 நிமிடங்கள் 10.75 வினாடிகள் தூண்களைப் பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த தூண் 123 அங்குல உயரமும் 20.5 அங்குல விட்டமும் 166.7 கிலோ மற்றும் 168.9 கிலோ எடை கொண்டவை ஆகும்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.