செய்திகள்

சென்னை துறைமுக முன்னாள் தலைவருக்கு 2 ஆண்டு சிறை

Published On 2016-12-01 03:00 GMT   |   Update On 2016-12-01 03:00 GMT
லஞ்ச ஒழிப்பு வழக்கில் சென்னை துறைமுக முன்னாள் தலைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை:

ஐ.ஏ.எஸ். பதவிக்கு 1982-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் கே.சுரேஷ். இவர், சென்னை துறைமுகத்தின் தலைவராக 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

இவர், இப்பதவியை வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், சுரேஷின் மனைவி கீதா உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும், இவர் துறைமுக தலைவராக இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தில் தன் மகனை சிவில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்த்தார். இந்த படிப்பில் சேர்ப்பதற்கு விஜயசாந்தி பில்டர்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கல்வி நிதியுதவியாக (ஸ்பான்சர்ஷிப்பாக) ரூ.12 லட்சம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 12-வது கூடுதல் சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விஜயசாந்தி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக, சென்னை துறைமுகத்தில் 2 எடைபோடும் எந்திர நிலையம் உள்ளது. அலுவலக ரீதியான தொடர்பை அந்த நிறுவனத்துடன் வைத்திருக்கும் போது, தன் மகனுக்கு இதுபோல கே.சுரேஷ் நிதியுதவியை பெற்றது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.ஜவகர் நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில், ‘சென்னை துறைமுக முன்னாள் தலைவர் கே.சுரேஷ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார். 

Similar News