செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை
வங்க கடலில் புயல் உருவாகியுள்ளதையடுத்து கடற்கரை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அறந்தாங்கி:
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், ஆவுடையார் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதல் பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனிடையே மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். மேலும் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததோடு, மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் கட்டுமாவடியில் இருந்து ஏனாதி வரையுள்ள கிருஷ்ணாச்சிபட்டினம், கோடியக்கரை, புதுக்குடி, அய்யம்பட்டினம், முத்துக் குடா, ஆர்.புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடற்கரை கிராமங்கள் ஆகும். இங்கிருந்து சுமார் 1500 நாட்டுப்படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இதே போல் ஜெகதாப்பட்டினம், கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 650 விசைப்படகுகள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 20 ஆயிரம் மீனவர்கள் வரை கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக 20ஆயிரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப் படகுகள், நாட்டுபடகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சி, அரியலூர் மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், லால்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலும், அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட தா.பழுர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்தது.