செய்திகள்
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக காரைக்காலில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

காரைக்காலில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2016-12-01 06:43 GMT   |   Update On 2016-12-01 06:44 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காரைக்கால்:

நடா புயல் நாளை 2-ந் தேதியன்று காலை சென்னைக்கும், வேதாரண்யத்திற்கும் இடையே (கடலூர் அருகே) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காரைக்கால் கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. கடற்பகுதியில் காற்றும் பலமாக வீசியது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும்படியும் மீன்வளத்துறை சார்பில் நேற்று முன்தினம் மாலை மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மேலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தடுப்பதற்காக நேற்று முதல் விசைப்படகுகளுக்கான டீசல் அனுமதியும் நிறுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

குறைந்தளவிலான மீனவர்களே மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அது போன்று அரசலாற்றில் பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆழ்கடலுக்கு சென்றிருந்த விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கரைக்கு திரும்பின.

காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்தில் நேற்று காலையில் புயல் சின்னம் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. பின்பு மாலை 3.30 மணியளவில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.



Similar News