கோயம்பேட்டில் இருந்து 50 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது
- கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தினமும் 400 மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன.
- கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து 300 மாநகர பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
எனவே சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பஸ் நிலையத்தில் 250 பஸ்கள், 270 கார்கள், 3500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 6 ஏக்கர் பரப்பளவில் மாநகர பஸ்களுக்கான பஸ்நிலையமும் கட்டப்படுகிறது.
கிளாம்பாக்கம் பஸ்நிலைய கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
தற்போது மாநகர பஸ்களுக்கான பஸ்நிலைய பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
மேலும் விரைவு பஸ் நிலைய பணிகளும் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன.
இந்த நிலையில் பணிகள் முடிவடைந்தவுடன் கோயம்பேட்டில் உள்ள பஸ்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆலோசனை தற்போது நடந்து வருகிறது.
அதாவது 50 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்று வரும் வகையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தினமும் 400 மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் 354 விரைவு பஸ்கள், 1234 விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்கள், 134 கும்பகோணம் போக்குவரத்து கழக பஸ்கள் என மொத்தம் 2 ஆயிரம் பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றது.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்படும் 50 சதவீத வெளியூர் பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, சேலம் போன்ற இடங்களுக்கு செல்வதற்கான அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து 300 மாநகர பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம், கோயம்பேடு, கிண்டி, பூந்தமல்லி, ஆவடி, பிராட்வே உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் அதிக பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் இருந்து வண்டலூர் வரை இயக்கப்படும் பஸ்கள் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப் படும். தாம்பரத்தில் இருந்து 60 பஸ்கள் மாற்றி இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.