போகி பண்டிகை எதிரொலி- புகை மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு
- விமான நேரம் மாற்றம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.
- புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றம்.
சென்னை விமான நிலையத்தைச் சுற்றுயுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், விமான நிலைய ஓடுபாதையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகை புகைமூட்டம் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு 108 விமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட புறப்பாடு மற்றும் வருகை விமானங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, பெங்களூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.