விசிக சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு - திருமாவளவன் அறிவிப்பு
- கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
- மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும்.
கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.