இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்திற்கு தேர்வான மாணவன் சஞ்சய் வேலாவை சால்வை அணிவித்து பாராட்டியபோது எடுத்தபடம்
இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்திற்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு
- ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர்.
- தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் வேலா. இவர் கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ நரேந்திர மோடி உரையாற்றினார். இதற்கு 26 மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவர்கள் தேர்வு செய்து அவர்கள் மூலம் அகஸ்தியர் சுற்றுச்சூழல் செயற்கைகோள் ஒன்றினை விண்ணில் ஏவ உள்ளனர்.
இதில் ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டார். இதில் பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை மாணவர்களுக்கு செயற்கைக்கோள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் இணைய வழி மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டது. இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சய் வேலா பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மற்றும் டி ஆர்டிஓ நிலையங்களில் மாணவர்களும் ஆசிரியர்களிடம் சேர்ந்து பயிற்சியில் பங்கேற்க நாளை (2ஆம் தேதி) செல்ல உள்ளார்.
தற்பொழுது ஆண்டிமடம் பகுதியில் உள்ள பலரும் அரசு பள்ளி மாணவரை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு பள்ளி மாணவன் சஞ்சய் வேலா கூறுகையில், தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன். மேலும் இஸ்ரோவிலும் நான் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும். மேலும் இஸ்ரோ விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பது தனது லட்சியமாக கூறினார். போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தனக்கு யாரேனும் உதவிகள் செய்தால் நிச்சயமாக நான் அதை செய்து காண்பிப்பேன் என்று கூறினார்.
இதுகுறித்து செய்தி அறிந்த அழகாபுரம் தலைவர் கலியபெருமாள், ரீடு தொண்டு நிறுவனர் ரீடுசெல்வம் மற்றும் விளந்தை தலைவர் வக்கீல் நடராஜன், ஓசை சண்முகம், சக்தி உள்ளிட்டோர் மாணவனை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தியதுடன் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டி நிதி உதவியும் வழங்கினர்.