செய்யாறு அருகே பைக் மீது பஸ் மோதி சென்னை டிரைவர்-மகள் பலி
- ரமேஷ் மற்றும் திலக் ஷனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
காஞ்சிபுரம் மாவட்டம் சர்வே தீர்த்த குளத்தை சேர்ந்தவர் ரமேஷ். சென்னையில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி பிரியா, மகள் திலக் ஷனா. இவர்கள் அனைவரும் நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற திருவிழாவிற்காக பைக்கில் சென்றனர்.
விழாமுடிந்து இன்று காலை 8.45 மணி அளவில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை தேத்துறை பஸ் நிறுத்தம் அருகே வரும்போது எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.
இதில் ரமேஷ் மற்றும் திலக் ஷனா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரியாவை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அனாக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.