திருவான்மியூரில் கார் இடித்ததில் சாலையில் விழுந்த துப்புரவு பெண் ஊழியர் லாரி மோதி பலி
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சிவகாமி மீது மோதியது.
- லாரி அவ்வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சிவகாமி(வயது37). துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை அவர் வழக்கம் போல் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சிக்னல் சந்திப்பு அருகே தூய்மை பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியாக ஐ.டி. நிறுவனத்தில், பணிபுரிந்து வரும் மவுலிவாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஸ்வந்த் என்பவர், பணி முடித்துவிட்டு வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சிவகாமி மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.
அந்த நேரத்தில் பின்னால் திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி சென்ற சரக்கு லாரி சிவகாமியின் தலை மீது ஏறி இறங்கியது.
மேலும் அந்த லாரி அவ்வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் துப்புரவு ஊழியர் சிவகாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
தகவல் அறிந்ததும் திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து பலியான சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக அஸ்வந்திடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.