தமிழ்நாடு

ஆஸ்பத்திரியில் அலைமோதும் கூட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

Published On 2023-09-25 07:39 GMT   |   Update On 2023-09-25 07:39 GMT
  • டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
  • கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சளி, சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக படையெடுத்து வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. தற்போது தினந்தோறும் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

மறைமலை நகராட்சியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் 95 பேர் மற்றும் பொறியாளர் பிரிவு அலுவலர்கள் உட்பட அனைத்து துறை ஊழியர்கள் உள்ளடக்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்களை அழித்தல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை கணக்கெடுத்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், புகை மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது பொத்தேரி கக்கன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மறை மலைநகர் நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் தொழில் சாலை நிர்வாகத்தினர் தங்களது வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள் என்றார்.

Tags:    

Similar News