தமிழ்நாடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாவட்ட செயலாளர் பதவிக்கான விண்ணப்ப மனுவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.

19 தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு அறிவாலயத்தில் இன்று மனுதாக்கல்

Published On 2022-09-22 06:09 GMT   |   Update On 2022-09-22 06:10 GMT
  • 19 மாவட்டங்களில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர்.
  • தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.முக. மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அங்கு மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க.வில் 5 ஆண்டுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி கிளைக் கழகம் முதல் பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரம், வட்டம், பகுதி என பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக மாவட்டக்கழக செய லாளர்கள் பதவிக்கு இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது.

தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் மாவட்ட செயலாளர் பதவிதான் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியாகும். இந்த பதவியை கைப்பற்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் கடும் போட்டி உள்ளது. ஆனாலும் கட்சித் தலைமை யாரை விரும்புகிறதோ அவர்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும்.

இதற்காக கடந்த 2 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து பேசப்பட்டது.

இப்போது மாவட்டச் செயலாளராக உள்ளவர்களையும் எதிர்கோஷ்டியில் உள்ளவர்களையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களாக அறிவாலயம் வந்து போட்டி உள்ள மாவட்ட செயலாளர்களிடம் பேசினார்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் இளைஞர் அணியில் உள்ள புதுமுகங்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கும் வகையிலும் அவரது அறிவுரைகள் இருந்தது.

அதன் அடிப்படையில் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான மனுவையும் அறிவாலயத்தில் பெற்று சென்றனர்.

மாவட்டச் செயலாளர் பதவியுடன் மாவட்டத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுவதால் அதற்கும் வேட்பு மனு கொடுக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அண்ணா அறிவாலயத்தில் இன்று மனுக்கள் பெறப்பட்டது.

கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, நெல்லை கிழக்கு, நெல்லை மத்தி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு.

தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் கீதா ஜீவன் மனுதாக்கல் செய்தார். கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பதவிக்கு ஜோசப்ராஜ் மனு தாக்கல் செய்தார்.

அவர்களிடம் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் மனுக்களை வாங்கினார்கள்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள் மனு தாக்கல் செய்தபோதும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமான பேர் உடன் வந்திருந்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அங்கு மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த தேர்தலில் சில மாவட்டச் செயலாளர்களை மாற்றி விட்டு இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சித் தலைவரிடம் உதயநிதி ஸ்டாலின் பட்டியல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் தென்காசி, தூத்துக்குடி, தர்மபுரி, திருநெல்வேலி, மதுரை உள்பட 5-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.

நாளைக்கு நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்பட 21 அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் மனுக்கள் வாங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News