கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
- கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திருத்தணி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையும் நீடித்து வருகிறது.
சென்னையில் இன்று காலை பலத்த மழை கொட்டியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. ஆந்திராவிலும் கனமழை கொட்டி வருகிறது.
ஆந்திர பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சித்தூர் மாவட்டம் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 33 அடி உயரம் உள்ள இந்த அணை முழுவதும் நிரம்பியது.
இந்த நிலையில் மழை நீடித்து வருவதால் அம்மப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.
இதையடுத்து அம்மப்பள்ளி அணையில் இருந்து 200 கன அடி உபரி நீர் 2 மதகுகள் வழியாக திறக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் அதிகம் தண்ணீர் பாயும்போது திருத்தணி அருகே உள்ள சமந்தவாடா, நெடியம், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கும். எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பா லங்களை பொதுமக்கள் கடக்கும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வழக்கமாக அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பள்ளிப்பட்டு, சமந்தவாடா, நெடியம், திருத்தணி பகுதி வழியாக கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.