அ.தி.மு.க. விலகியதால் பா.ஜனதாவுக்கு நஷ்டம் இல்லை: எச்.ராஜா
- இந்திய அளவில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
- வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அ.தி.மு.க.விற்கு தான் நஷ்டம். 1991-ல் இருந்து பா.ஜனதா தேசிய அளவில் தனித்து நின்று தனித்திறமையை நிரூபித்துள்ளது. பா.ஜனதாவாகிய நாங்கள் தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்துள்ளோம். அ.தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்துள்ளோம்.
கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அண்ணாதுரையை பற்றி உண்மைக்கு மாறாக பேசவில்லை. கூட்டணி என்பது பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்காக அமைக்கப்படுவது.
இந்திய அளவில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2014-ல் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம்.
அப்போதே தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றி விட்டது. அப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களைவிட தி.மு.க. 2 சதவீதம் தான் அதிகமான வாக்குகளை பெற்றது. ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி பிரிந்து இருந்தது. சிதறி பிரிந்து கிடந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்தது பா.ஜனதா தான். அப்போது நானும் உடன் இருந்தேன்.
பிரிந்து இருந்த அ.தி.மு.க. தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியது பா.ஜனதா. எடப்பாடி பழனிசாமி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார்.
வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பா.ஜனதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தென்காசி மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவர் ராம ராஜா, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.