கடும் பனி மூட்டம் காரணமாக விபத்து- சிறுமலையில் அரசு பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்
- 18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது.
- விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பொதுமக்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன் அரசு பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சிறுமலை நோக்கி சென்றது. பஸ்சை தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக திண்டுக்கல் கள்ளிபட்டியை சேர்ந்த சேகர் இருந்தார்.
திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் சிறுமலை பகுதி முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது.
18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்க ஓடி வந்தனர்.
பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 ஆம்புன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40), சிறுமலை தென்மலையை சேர்ந்த பழனியம்மாள் (65), பாஸ்கரன் (62), கார்த்திக் (26), கணேசன் (67), ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த கோபால் (40) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர் சங்கீதா வெள்ளி மலை, கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் ஆகியோர் பொதுமக்களை அழைத்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.