குமரியில் மழை நீடிப்பு: சிற்றாறு 2-ல் 26.2 மி.மீ. பதிவு
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளில் இருந்தும் சாகுபடிக்காக 1039 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சாரல் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று மாவட்ட முழுவதும் இரவு பரவலாக மழை பெய்தது.
பூதப்பாண்டி கன்னிமார், கொட்டாரம், நாகர்கோவில், சுருளோடு, தக்கலை, அடையாமடை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு ரம்யமான சூழலும் நிலை வருகிறது.
அருவியில் குளிப்பதற்கு கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது.
சிற்றாறு2 அணைப்பகுதியில் அதிகபட்சமாக 26.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளில் இருந்தும் சாகுபடிக்காக 1039 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.20 அடியாக உள்ளது. அணைக்கு 620 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 58.35 அடியாக உள்ளது. அணைக்கு 202 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 260 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு1 அணையின் நீர்மட்டம் 11.71 அடியாக உள்ளது. அணைக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பொய்கை அணையின் நீர்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறை அணையின் நீர்மட்டம் 28.71 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 6.60 அடியாக உள்ளது.
அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.