வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி?- தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
- ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.
சென்னை:
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஆவடி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், '6பி' படிவத்தை அளித்து, அதில் விவரங்களை பதிவு செய்வதுடன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கேட்பதாகவும், ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனி செல்போன் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் "6பி" படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.
அதேபோல, தேசிய வாக்காளர் சேவை அமைப்பான 'என்.வி.எஸ்.பி. போர்ட்டல்' (https://www.nvsp.in ), வாக்காளர் சேவை எண் '1950' போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.
'6பி' படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் 6 முதல் 8 வரையிலான படிவங்களுக்கு வழக்கமாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.
ஆனால், ஆதார் இணைப்புக்கான '6பி' படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படுவது இல்லை. ஒப்புகைச்சீட்டு தராவிட்டால், ஆதார் இணைப்பு குறித்த நிலையை எப்படி அறியமுடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்ற படிவம்போல, ஆதார் இணைப்புக்கும் ஒப்புகைச் சீட்டு தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.