இளம்பெண் தற்கொலை முயற்சி: திருமணத்துக்கு மறுத்த கள்ளக்காதலன் கைது
- கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார்.
- மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே அக்கரைபாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது 23) தனது கணவரை பிரிந்து தன்னுடைய 3 வயது ஆண் குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இப்பெண்ணுக்கும், பாலம்பட்டி பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி கோபால் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி அவர்களுக்கு இடையே ரகசிய உறவு ஏற்பட்டது. இதையடுத்து கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார். சம்பவத்தன்று இரவு கோபால் தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அங்கு சென்ற காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோபாலிடம் வற்புறுத்தி உள்ளார். கோபால் மறுக்கவே அவருடன் காதலி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்படி இருந்தும் கோபால் தன்னுடைய நிலையில் பிடிவாதமாக இருந்தார். இதில் மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார், அவரை அழைத்துச்சென்று சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கள்ளக்காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.