சுப்ரீம் கோர்ட் மூலம் விரைவில் நல்ல செய்தி வரும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே நிச்சயமாக இருக்க முடியாது.
- தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புகழை பெற்ற பாடகி அவர்.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு டாக்டர் பட்டம் பெற்ற பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே நிச்சயமாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புகழை பெற்ற பாடகி அவர்.
அதே போல் இசையில் அறிஞர் பி.எம்.சுந்தரம் பன்முக திறமை கொண்டவர். மிகப்பெரிய இசை மரபில் பிறந்து இசைத் துறைக்கு அரிய தொண்டாற்றி வருபவர்.
மங்கல இசை மன்னர்கள் மரபு தந்த மாணிக்கங்கள் போன்ற இசைத் துறையில் முக்கியமான நூல்களை படைத்தவர். எல்லாவற்றுக்கும் மேல் கலைஞர் மனதில் இடம் பிடித்தவர்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எங்கள் தஞ்சை மன்னை சார்ந்தவர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோட முதலமைச்சரான நான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறதால்தான் மக்கள் எண்ணற்ற பிரதிபலிக்கிற வகையிலான இது போன்ற முடிவுகள் எடுக்க முடிகிறது.
அதனால்தான் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
அதற்காக சட்ட முன் வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்.
இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டு வருகிறது. நல்ல செய்தி வரும் என்று எதிர் பார்ப்போம். வர வேண்டும் என்று எதிர் பார்ப்போம்.
செய்திகளில் பார்த்திருப்பீர்கள், நாளிதழில் படித்திருப்பீர்கள். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையில், நேற்றைய தினம், நீதிபதிகள் கருத்துக்களை அதில் சொல்லி இருக்கிறார்கள். ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை கல்வி மானிய பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
இப்படி மாற்றினால்தான் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும். நான் தமிழ்நாட்டிற்காக மட்டும் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களை சேர்த்துதான் சொல்கிறேன். நான் அடிக்கடி சொல்வது போல கல்விதான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.
இந்த தருணத்தில் 2 அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியம் ரூ. 3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதி ஆண்டில் இருந்து வழங்கப்படும்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம், நூலகம் மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு முறை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.