வாணியம்பாடி அருகே 40 அடி ஆழத்திற்கு நிலம் உள்வாங்கிய இடத்தில் கனிம வள அதிகாரிகள் ஆய்வு
- விவசாய நிலத்தில் திடீரென அதிக சத்தத்துடன் 40 அடி ஆழம் மற்றும் 15 அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு நிலம் உள்வாங்கியது.
- பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சி கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மலையடிவாரத்தில் உள்ளது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
வழக்கம்போல விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக முருகேசன் நேற்று சென்றார்.
அப்போது, விவசாய நிலத்தில் திடீரென அதிக சத்தத்துடன் 40 அடி ஆழம் மற்றும் 15 அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு நிலம் உள்வாங்கியது. அதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து அதன் அருகே சென்றார். அப்போது பெரும் சத்தத்துடன் நிலம் மேலும் உள்வாங்கியது.
இதனைக் கண்டு விவசாயி மற்றும் அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து ஆலங்காயம் தீயணைப்பு மீட்பு படையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாய நிலத்தில் பார்வையிட்டனர்.
பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன் பின்னரே நிலம் உள்வாங்கியதற்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.