தமிழ்நாடு

அரசு ஆஸ்பத்திரியில் பணிக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

Published On 2022-12-15 15:58 IST   |   Update On 2022-12-15 15:58:00 IST
  • வார்டு மற்றும் சுற்றுப்புறங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
  • ஆஸ்பத்திரியை முறையாக கண்காணிக்க தவறிய செங்கல்பட்டு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமாமணியை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

சென்னை:

அமைச்சர் ஆய்வுக்கு செல்லும்போது முன்கூட்டியே தகவல் கொடுத்து சென்றால் வாசல்களில் கோலம் போட்டு, வாசனை திரவியங்கள் தெளித்து சுற்றுப்பகுதியை மணக்க வைத்து அமைச்சர்களை உற்சாகமாக வரவேற்பார்கள். எந்த குறையும் கண்டு பிடிக்க முடியாதபடி அமைச்சர்களும் மனநிறைவோடு திரும்பி விடுவார்கள்.

திடீரென்று சென்றால்தான் உள்ளே இருக்கும் பிரச்சினைகள் வெளியே தெரியும். இந்த மாதிரி திடீர் ஆய்வுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார்.

இன்று திருவண்ணாமலையில் அரசு ஆஸ்பத்திரியில் கட்டட திறப்பு விழா நடந்தது. அதற்காக காரில் சென்ற அமைச்சர் மதுராந்தகத்தில் அரசு ஆஸ்பத்திரியை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு திடீரென்று ஆஸ்பத்திரிக்குள் சென்றார். உடனடியாக மருத்துவர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.

அப்போது 4 மருத்துவர்கள் வராதது தெரிய வந்தது. அதை குறித்து வைத்து விட்டு வார்டுகளுக்குள் வேகமாக சென்றார். அங்கு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியிடமும் மருத்துவர்கள் வருகிறார்களா?

சரியாக கவனிக்கிறார்களா? என்று கேட்டுக்கொண்டார். வார்டு மற்றும் சுற்றுப்புறங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதையும் பார்வையிட்டார்.

பின்னர் அந்த ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி அறைக்கு சென்று பணியில் இல்லாத மகப்பேறு மருத்துவர் மிர்லின், மயக்கவியல் துறை மருத்துவர் பிரபா வடிவுக்கரசி, எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷா பாலாஜி, தொண்டை, காது, மூக்கு சிறப்பு மருத்துவர் கிரத்திகா ஆகியோர் ஏன் பணியில் இல்லை? பணிக்கு வராவிட்டால் லீவுக்கான கடிதம் எங்கே? என்று கேட்டார். அதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் அவர்கள் பணிக்கு வராதது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 17 பி மெயே கொடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் இந்த ஆஸ்பத்திரியை முறையாக கண்காணிக்க தவறிய செங்கல்பட்டு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமாமணியை உடனடியாக இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த ஆஸ்பத்திரியில் மாதம் 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு நடக்கிறது. மக்கள் அரசு ஆஸ்பத்திரி மீது நம்பிக்கை வைத்து வருகிறார்கள். மருத்துவ சேவைக்காக 16 டாக்டர்கள் நியமித்து அரசு சம்பளம் வழங்குகிறது. ஆனால் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடும் கோபத்தில் எச்சரித்தார். நாங்கள் ஆய்வு செய்வதை விட நீங்கள் மன சாட்சியோடு பணியாற்றுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

Tags:    

Similar News