தமிழ்நாடு

குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது... அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி

Published On 2022-10-25 18:03 IST   |   Update On 2022-10-25 18:03:00 IST
  • மதக் கலவரங்களை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் காட்டம்
  • அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய அவர், கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு ஆகியவை தற்போது ஐ.எஸ். கலவர பூமியாக மாறி வருவதாகவும், இந்த தாக்குதலை தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:-

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.

கோவையில் சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சரின் உத்தரவின்படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன. அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.

Tags:    

Similar News