null
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி நவீன் என்ற வீரர் உயிரிழப்பு- செல்வப்பெருந்தகை இரங்கல்
- இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று முடிந்தது.
- ஜல்லிக்கட்டில் மாடு முட்டி நவீன் குமார் என்ற மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது. இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.
இந்நிலையில், மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மார்பில் குத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாடு பிடி வீரர் நவீன் அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த நவீன் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற விழைகிறேன்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், எதிர்பாராத நிலையில் இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மண்ணின் கலாச்சாரத்துடன் இணைந்த விளையாட்டாக இருந்தாலும் கூட, உயிரை விட விலை மதிக்கமுடியாதது வேறெதுமில்லை. எனவே, காளை தழுவும் வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும்.
மாடுபிடி வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். இனி நடைபெறும் அலங்காநல்லூர் உள்ளிட்ட மாடுபிடி நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்படாவண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.