செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினையில்லை: அமைச்சர் துரைமுருகன்
- அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருவதால் எந்த சேதாரமும ஏற்படாது.
- வரும் 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள்
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில்வ நீரின் இருப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இப்போது 2786 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினையில்லை. இன்னும் தண்ணீர் வந்தாலும் தாங்கும் சக்தி ஏரிக்கு உண்டு. இன்னும் மழை வரும் என எதிர்பார்க்கிறோம். 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கணித்து, நீர் வரத்து, நீர் வெளியேற்றுதல், பருவநிலை, மழை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். ஆகவே எந்த சேதாரமும ஏற்படாது.
ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அனகாபுத்தூர் வழியாக அடையாற்றில் கலக்கிறது. ஏரியின் கரைகள் கட்டப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் பாதுகாப்பாக உள்ளன. தண்ணீர் வரத்து அதிகமாகி, கரையோர பகுதிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்,