மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை- பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்வு
- தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 60.55 அடியாக இருந்த நிலையில், இன்று 63.05 அடியாக உயர்ந்தது.
அணைக்கு தற்போது வினாடிக்கு 1176 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 806 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையில் 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று 76.11 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று 1 அடி உயர்ந்துள்ளது.
இதேபோல் புறநகர் பகுதிகளான அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. களக்காட்டில் அதிகபட்சமாக 1.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணை பகுதிகளான கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் அந்த அணைகளின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கனடா அணையில் 60.50 அடியும், ராமநதியில் 73.25 அடியும் உள்ளது. ராமநதி அணை நிரம்ப இன்னும் 10 அடி நீரே தேவை.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இதமான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.