அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை... இன்று மதுரை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
- பாஜக பிரமுகர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குவது பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
- குண்டு வீசிய நபர், இருசக்கர வாகனத்தில் வந்த நபருடன் ஏறி தப்பியோடிவிட்டார்.
மதுரை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களாக பாஜக பிரமுகர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குவது பதற்றத்தை உருவாக்கி உள்ளது. கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரையிலும் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அப்பகுதியில் வேகமாக வந்த நபர் ஒருவர் கிருஷ்ணன் வீட்டின் வாசலில் நின்றவாறு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார். இதனால், அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு இருசக்கர வாகனத்தில் தயாராக வந்த நபருடன் ஏறி அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதன் சிசிடிவி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.