பூண்டி ஏரி நீர்மட்டம் 34 அடியை நெருங்கியது
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நெருங்கி உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
மொத்த உயரமான 35 அடியில் 33 அடியை தாண்டியதால் பூண்டி ஏரியில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தும் 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் இருந்தது.
தற்போது மழை அதிகம் இல்லாததால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து 1200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் மூலம் 630 கனஅடியும், உபரிநீராக 500 கனஅடியும் செல்கிறது.
பூண்டி ஏரியின் நீர் மட்டம் 34 அடியை(மொத்த உயரம் 35 அடி) நெருங்கி உள்ளது. ஏரியில் தற்போது 33.85 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. விரைவில் ஏரியின் நீர்மட்டம் 34 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2776 மி. கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.73 அடியாக பதிவானது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 16.66 அடியாக உள்ளது. ஏரிக்கு 371 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 2342 மி.கனஅடி தண்ணீர் ஏரியில் உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.