தமிழ்நாடு

எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து நிற்க தயாரா? தி.மு.க.விற்கு சவால் விட்ட செல்லூர் ராஜூ

Published On 2024-06-19 06:55 GMT   |   Update On 2024-06-19 06:55 GMT
  • தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது.
  • சட்டமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள்.

மதுரை:

விடாமுயற்சி கொண்ட ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து தனது 'எக்ஸ்' வலைதளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிடும் வீடியோவை பகிர்ந்து நான் கவர்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் இவரது கருத்து விவாதிக்க தொடங்கியது. அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் இந்த பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்து இருந்தனர். இதையடுத்து சில நாட்களில் அந்த பதிவை செல்லு ராஜூ திரும்ப பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இ-சேவை பிரிவை தொடங்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, மீண்டும் ராகுல் காந்திக்கு புகழாரம் சுட்டியுள்ளார். அப்போது மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அந்த வகையில் விடாமுயற்சி கொண்ட ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வுக்கும், எங்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். எதற்காக இந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்? இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது.

இடைத்தேர்தல் என்றாலே புது புது யுத்திகளை தி.மு.க. சட்டத்திற்கு புறம்பாக செய்யும். பணம் ஆறாக ஓடும், மக்களை எந்த வகையில் கவர்வதற்கும் தி.மு.க.வினர் செயல்படுவார்கள். பா.ம.க.வின் ஓட்டு வங்கி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த இடைத்தேர்தலில் நிற்கிறார்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகை பூவிற்கு மனம் இல்லை என்று கூற முடியாது. ராகுல் காந்தி விடாமுயற்சி கொண்டவர். காங்கிரசை கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தி.மு.க.வினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியும் இல்லாமல் தி.மு.க. தனித்து நிற்க தயாரா? அ.தி.மு.க. போல் தி.மு.க. தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும். மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி தேர்தலை சந்திக்க தயாரா? ஜெயலலிதா போன்று இன்றைய முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க. தலைவர்களும் முடிவெடுப்பார்களா? சட்டமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News